தென்காசி: மாவட்டக் காவல் கண்கணிப்பாளராக பணியாற்றி வந்த சுகுணா சிங், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (ஜூன்.08) தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
'மக்களைத் தேடி காவல் துறை'
தொடர்ந்து அலுவலக வளாகத்தில் 'மக்களைத் தேடி காவல் துறை' என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், காவல் துறை மற்றும் செய்தியாளர்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "தற்போது ஊரடங்கு காரணமாக குற்றங்கள் குறைந்துள்ளன. பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள். காவல் நிலையம் சென்று புகாரளிக்கத் தயங்குபவர்கள் என்னுடைய தனிப்பட்ட எண்ணிற்கு புகாரளிக்கலாம். தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பெண்கள் குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் சமரசமின்றி நடவடிக்கை
புதிய மாவட்டம் என்பதால் மாவட்டம் முழுமை பெற அனைத்து உதவிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலாத்தலங்களில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்ற வழக்குகள் எவ்வித சமரசமுமின்றி நேர்மையான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.
எனக்கு கீழ் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் நேர்மையாக பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என அவர் தெரிவித்தார்.