தென்காசி: திருஷ்யம் எனும் மலையாள திரைப்படத்தின் கதை தழுவலான 'பாபநாசம்' என்கிற தமிழ் திரைப்படமானது நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை கெளதமி இணைந்து நடித்து 2015ல் படம் வெளியானது. இப்படத்தில் ஒரு கொலை குற்றத்தை மறைப்பது எப்படி என்பது தொடர்பாக ஒருங்கிணைந்த கருத்துகளை குடும்பத்தினருடன் வெளிப்படுத்தினர்.
குடும்பத் தலைவராக செயல்பட்ட கமல்ஹாசன் தனது நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்திய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி அந்த திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இந்த பாபநாசம் திரைப்படத்தின் அநேக காட்சிகள் தென்காசி மாவட்டத்தில் எடுக்கப்பட்டன.
இதில் வரும் ஒரு காட்சியில் “ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாங்கள் தென்காசி தியானத்திற்கு சென்றோம்” என்று சுயம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் போலீசார் விசாரணையில் தெரிவிப்பார். இதையடுத்து ஆகஸ்ட் இரண்டு என்ன தினம்? என்று கேட்கும் அளவிற்கு அது பிரபலம் ஆகிவிட்டது.
இதையும் படிங்க: 'சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறை அமைச்சராக உள்ளார்’ - அண்ணாமலை
ஒவ்வொரு ஆண்டும் அந்த தேதியை குறிப்பிட்டு பலர் இணையதளங்களில் மீம்ஸ்களை பரப்புவதுண்டு. பாபநாசம் படம் 2015ம் ஆண்டு வெளியான நிலையிலும் இன்றும் அந்த படத்தில் வரும் வசனம் பேசு பெருளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி ஆன இன்று சுயம்புலிங்கம் தென்காசி தியானத்திற்கு சென்றதாக கூறும் மீம்ஸ்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பரவி வருகிறது.
இந்தச் சூழலில், இந்த மீம்ஸை விழிப்புணர்வாக பயன்படுத்தி தென்காசி காவல்துறையினர் வித்தியாசமான ஒரு விழிப்புணர்வு பதிவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதாவது, பேருந்து பயணம் மற்றும் பொது வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு.
குடும்பத்தினரின் உடமைகள் மற்றும் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வது ஒரு குடும்பத் தலைவரின் பொறுப்பு என நன்கு உணர்ந்தவர் இந்த சுயம்புலிங்கம் என்ற கருத்தை பதிவு செய்து, ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்தை எப்படி பாதுகாப்பாக வெளியில் அழைத்துச் சென்று வீடு திரும்ப வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தென்காசி மாவட்ட காவல்துறையினர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பதிவிட்டுள்ளது. இந்த மீம்ஸ் அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Chennai Metro: மெட்ரோ பயணியா நீங்கள்? உங்களுக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கொடுத்த அப்டேட்!