தென்காசி: ஆய்க்குடி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழா திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக நடைபெறும் விழாவாகும். வருடா வருடம் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவுக்கு, மிகவும் பெயர் பெற்ற ஸ்தலமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 13ஆம் தேதி கந்த சஷ்டி திருநாள் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கந்த சஷ்டி திருவிழா நாட்களில் சுவாமி காலை, இரவு என தினமும் இரு முறை மயில், குதிரை போன்ற வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து, 6ஆம் திருநாளான நேற்று காலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு சூரசம்ஹார விழாவிற்காக சுவாமி, மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து விரதம் இருந்து அசுரன் போல் வேடமணிந்து மகாசூரன், யானமுகாசூரன், சிங்க மகாசூரன் ஆகியோரை முருகப்பெருமான் பக்தர்களின் ‘வேல் வேல் அரோகரா’ என்ற கோஷத்துடன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசன்ம் செய்தனர்.
மேலும், மற்ற முருகன் கோயில்களில் அசுரன் சிலை போல் இல்லாமல், மனிதர்களே விரதம் இருந்து அசுர வேடம் அணிந்து முருகப்பெருமானிடம் போர் புரிவதுபோல் நடைபெறும் சூரசம்கார நிகழ்வு, இந்தக் கோயிலின் சிறப்பம்சமாகும்.
மேலும் நிகழ்ச்சியில் எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். மேலும், ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு, பக்தர்களிடம் ஏதேனும் திருட்டுச் சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு காவல்துறையினர் முன்னேற்பாடுகள் செய்திருந்தனர்.
மேலும், பக்தர்களின் வருகைக்கு ஏற்ப வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறையினர் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: "ஆளுநருக்கும், அரசுக்கும் கருத்து வேறுபாடு... அதுவே சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்" - எடப்பாடி பழனிசாமி!