தென்காசி: மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அபூர்வ சர்க்கார் என்பவர் ஏழை எளியோருக்கு நீண்ட நாட்களாகக் குறைந்த கட்டணத்தில் பரம்பரை வைத்தியம் செய்து வருகிறார். இவர்களது குடும்பம் தமிழ்நாட்டின் தென்காசியில் புலம்பெயர்ந்துள்ளது. இவரது மகன் அன்சூசர்க்கார்(6) புளியங்குடியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுவன் கரோனா ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துவந்துள்ளார். அப்படி ஒரு நாள் சிறுவனின் ஆட்டத்தை பார்த்த தந்தை வியந்துபோனார். இதனால், சிறுவனுக்கு தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.
5 மணி நேரம் பயிற்சி: நாளுக்கு நாள் சிறுவன் கிரிக்கெட்டில் அசாதாரணமாக விளையாடவே. பயிற்சி கொடுக்கும் நேரத்தை அதிகரித்து தினமும் நான்கு முதல் 5மணி நேரம் பயிற்சி கொடுத்துவந்தார். இதனிடையே பள்ளிகள் திறக்கப்பட்டதால், தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரண்டு மணி நேரம் பயிற்சி கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், "எவ்வளவு நேரம் பயிற்சி கொடுத்தாலும் ஆர்வம் குறையாமல் அன்சூசர்க்கார் ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவருக்கு யூடியூப் மூலம் கிரிக்கெட் வீரர்கள் கொடுக்கும் பரிந்துரையின்படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவரது ஆட்டத்தை பார்த்த சில சமூக ஆர்வலர்கள் அவருக்கு கிரிக்கெட் விளையாட உதவியாக உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்: இதற்குமேல் முறையாக கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி கொடுக்க முடிவெடுத்துள்ளேன். ஆனால் பொருளாதார வசதி இல்லை. அரசாங்கமோ, சமூக ஆர்வலர்களோ உதவும் பட்சத்தில் எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் பல சாதனைகள் படைத்து இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என் மகன் பெருமை சேர்ப்பார்" என்றார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் வீராங்கனை ரேவதி வீரமணிக்கு பதவி உயர்வு - ரயில்வே அறிவிப்பு