தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி மசாலா வியாபாரி மற்றும் இரண்டு விவசாயிகளை சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் கரடி வழி மறித்து கடித்துக் குதறியது.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதற்கிடையில் 3 பேரை தாக்கிய அந்தக் கரடியை அன்று இரவே 2 மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
அதன்பின் மறுநாள் களக்காடு அருகே செங்கல்தேரி என்ற அடர் வனப்பகுதியில் கரடி விடப்பட்ட நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக அந்த கரடி இறந்ததாக வனத்துறையினர் தொரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்குப் பின் களக்காடு அருகே அந்த கரடியின் உடல் எரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரடியின் பிரேதப்பரிசோதனையில் இறந்த கரடிக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி ரேபிஸ் என்னும் வெறிநோய் பாதிப்பும் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆக்ரோஷத்துடன் மனிதர்களை தாக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை ரேபிஸ் நோய் தாக்காமல் தடுக்க இன்று (நவ.14) கடையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனிகுமார் தலைமையில் ரேபிஸ் தடுப்பூசி போடும் முகாம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் முதற்கட்டமாக வனச்சரகர் கருணாமூர்த்தி, வனவர் முருகேசன் உட்பட 31 வனத்துறையினருக்கு மருத்துவப் பரிசோதனை, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் செய்தபிறகே தடுப்பூசி போடப்பட்டது. நான்கு கட்டமாக இந்த தடுப்பூசி போட வேண்டும். மேலும் பொதுமக்கள் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வனத்துறையினர் பெத்தான்பிள்ளை குடியிருப்புப் பகுதியில் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகம் கூறுகையில், 'மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் 3 பேருக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நாகேந்திரன் என்பவருக்கு தற்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாடு மேய்க்க சென்றவர் கொலை .. .உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்