தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
இந்த நிலையில், முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணி இன்று (நவ.20) நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இடத்தினை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக தென்காசியில் இருந்து திருமலைக்கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த குழுவினர், அடுத்த கட்டமாக அதன் அருகே உள்ள சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தரிசு நிலத்தினை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இடம் தேர்வு செய்யப்படும் எனவும், நிகழ்ச்சியில் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வருகை தர உள்ளதால், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம்: தலைமைச் செயலக சங்கம் அறிவிப்பு