தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாகவும், கருப்பாநதி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாகவும் குலசேகரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான கண்மாய்கள் நிரம்பியுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவும் எட்டப்பட்ட நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி கருப்பாநதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் உபரி நீரால் ஓரளவு நிரம்பிய நீர் நிலைகளில், தற்போது கூடுதல் தண்ணீர் சேர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்து ஓடுகிறது கடந்த 2020ஆம் ஆண்டு கண்மாயின் நீர் மறுகால் பாய்ந்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் கண்மாய் நிரம்பியுள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதேபோல் தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் அருகில் அமைந்துள்ள குலசேகரமங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடையன் குளம் கண்மாய் மற்றும் பெரியகுளம் உள்ளிட்ட பல கண்மாய்களில் நீர் நிரம்பி வழிகின்றன.
அடுத்தடுத்து தொடர் மழை பெய்ததால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கண்மாய்களும் தண்ணீர் நிரம்பியவாறு காட்சியளிக்கிறது. மூன்று வருடங்களுக்குப் பிறகு பெரியகுளம் கண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் ஒன்றுகூடி நீர்பிடிப்பு மதகு பகுதியில் வழிபாடு நடத்தினர்.
குளத்தைச் சுற்றியுள்ள குலசேகரமங்கலம், ரெங்கநாதபுரம், இ.துரைச்சாமியாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான இளைஞர்களும் குளத்தில் குளிப்பதற்கும் அதே போல் பகுதியைச் சேர்ந்த பெண்கள் துணி துவைப்பதற்கும் வந்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து குலசேகரமங்கலம் கிரமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், "தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டாளும், தற்போது குளங்கள் மற்றும் கண்மாய் நிரம்பியதால் அடுத்த ஒருவருடத்திற்கு விவசாயம் செய்வதற்கு தண்ணீபஞ்சம் இருக்காது. தண்ணீர் நிறைந்திருப்பது போல மனதும் நிறைந்துள்ளது" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லை மழை வெள்ளத்தில் வாழ்வாதாரம் இழந்த கடை உரிமையாளர்.. இழப்பீடு வழங்க வேண்டி கண்ணீருடன் கோரிக்கை!