தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இயங்கிவரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு 2018 - 2019ஆம் ஆண்டு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 24 கோடி நிலுவை பணம் இதுவரை வழங்கப்படவில்லை.
நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் சர்க்கரை ஆலை முன்பும், பணத்தைப் பெற்றுதரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் இறுதிக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொகையானது வழங்கப்படாமல் இரண்டு வருடங்களாக இழுத்து அடிப்பதாக கூறி இன்று (டிச.10) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர், மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கையில் கரும்புடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இம்முறை கரும்புக்கான நிலுவைத் தொகையை கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறி உணவு சமைப்பதற்குத் தேவையான அடுப்பு, பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.