தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. அவரின் மகன் மதியழகன் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் பெரும்பத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார்.
அங்குச் சென்றிருந்து அவர், அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவருடன் அருகிலுள்ள கிணற்றில் குளித்துவிட்டு, சங்கரன்கோவில்–ராஜபாளையம் சாலையில் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
அப்போது எதிரே வந்த வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இந்த விபத்தில், மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இளவரசனை பொதுமக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், உயிரிழந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் விபத்துக்கு காரணமானவர்களை கைதுசெய்ய கோரி, அவரின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. அதையடுத்து மாணவர் உடல் உடற்கூராய்விற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனம் மோதி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு!