தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தரணி சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலைக்கு 2018-19 ஆம் ஆண்டு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 24 கோடி நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் தரணி சர்க்கரை ஆலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர், சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் இரண்டு வருடங்கள் ஆகியும் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் உள்ளது. இதைக் கண்டித்து நேற்று (டிச.10) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பழனிசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் உணவு சமைப்பதற்கான பொருட்களுடன் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, மீண்டும் மாவட்ட ஆட்சியர், சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இம்மாதம் இறுதிக்குள் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் எழுத்து பூர்வமாக உறுதியளித்தது. அதன்படி கரும்பு விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்!