தென்காசி: அருகே குத்துக்கல் வலசை பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாநில சிறுபான்மைத்துறை ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது ”தமிழக முதல்வர் உடல் நலம் பெற்று வீடு திரும்பி இருக்கிறார். இது எங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்ற அவர் பாடுபட்டு வருகிறார்”.
கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்பட்ட கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மாணவி இறப்பிற்கு உரிய விசாரணையை தமிழக அரசு நடத்தும். அமைதி பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் வன்முறை தூண்டி விட்டு அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் முயற்சி நடைபெறுகிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது என அவர் தெரிவித்தார்.
பள்ளி நடத்துபவர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட இருக்கும் மாணவர்களின் திறன், மனநிலையைப் பார்த்துச் செயல்பட வேண்டும். தமிழகத்தில் உலக நாடுகள் தொழில் தொடங்க வருகின்றனர். உலக நாடுகள் பங்கேற்கும் வகையில் ஒளிம்பியாட் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்திற்குக் காரணமே நாம் மொழியால், இனத்தால், மதத்தால் பிளவுபடாமல் தமிழராய் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதற்குத்தான்.
தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி செயல்படுத்த அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் சிறுபான்மை துறை பணிகளை மேற்கொள்ள தற்போது ஐந்து மாவட்டங்களுக்கு சிறுபான்மை நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு 5 வருடத்தில் தனி அலுவலர் நியமிக்கப்படுவார்கள் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுபான்மை துறை மூலம் கடன் உதவி, கல்வி உதவித் தொகை, நலவாரியம், தேவாலய பணியாளர்கள் வாரியம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. தேவாலய பணியாளர்கள் வாரிய உறுப்பினர் அட்டைக்கான விண்ணப்பம் அந்தந்த திருச்சபை தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால் உறுப்பினர் அட்டை வழங்கும் பணி நடைபெறும் என கூறினார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் , வீட்டு வரி உயர்வைக் கண்டித்து அதிமுக வரும் 25ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு!