தென்காசி மாவட்டத்தில் கரோனா காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர்களுக்கு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுவரை மாவட்டத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வதன் காரணமாக தென்காசி மாவட்டம் ஆயக்குடி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விரைவில் குணமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷாவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “இங்கு 156 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 853 நபர்கள் அனுமதிக்கப்பட்டு, அதில் 702 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சித்த மருத்துவ முறையில் நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீர், நெல்லிக்காய்ச் சாறு, மூலிகை வேர்கள் கொண்டு ஆவி பிடித்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தவிர, காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் மன அளவில் உற்சாகமும் , உடல் அளவில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இக்காரணங்களால் நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட ஏழு நாட்கள் முதல் 8 நாட்களுக்குள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். வீடு திரும்புபவர்களை அப்படியே விட்டுவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் முதலமைச்சர் தொடங்கி வைத்த ஆரோக்கிய மருந்து வாயிலாக 20 நாட்களுக்கு தேவையான மாத்திரைகளும், லேகியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் வேகமாக குணமடைந்து வருகின்றனர்”என்றார்.
தென்காசி மாவட்டத்தில் கரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வரும் நிலையில், இதற்காக தனியாக மருத்துவமனை வார்டுகள் இல்லாததால் சித்த மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் பிற நோயாளிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் சித்த மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சித்த மருத்துவம்