தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கரோனா வார்டில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் கரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கரோனா சிகிச்சைக்காக கூடுதல் படுக்கை வசதிகள், சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பாளையங்கோட்டையில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் உள்ள 350 படுக்கைகளும் கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.
மேலும் சித்த மருத்துவக் கல்லூரியில் தினமும் வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்துடன், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதனை வாங்க அதிகமான மக்கள் வரிசையில் காத்திருப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று முதல் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயுஸ் மருத்துவத் துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்ட கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்ற கசாயங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதுவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்காக தற்காலிகமான நடவடிக்கை என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் மாஸ்க் அணிந்து ரேசன் பொருள்கள் வாங்கிச்சென்ற மக்கள்!