தென்காசி: வடகரை பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராக உள்ள முருகன் என்பவர் பாலியல் தொல்லை தருவதாக சுகாதாரப்பணியாளர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஆக.22) புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டப்பெண் அளித்த புகார் மனுவில், 'நான் கடந்த 5 ஆண்டுகளாக வடகரை பேரூராட்சியில் ஒப்பந்த முறை அடிப்படையில் சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் முருகன் என்பவர் என்னிடம் அருவருத்தக்க ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் தொல்லை தந்து அத்துமீறிலில் ஈடுபட்டு வருகிறார். தவிர, இதுபோன்று ஏனைய பெண்களிடத்திலும் இவ்வாறே அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, நான் இது குறித்து உயர் அலுவலர்களிடம் புகார் அளிப்பேன் என்றதற்கு, 'யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடு; என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது' என்கிறார். இது குறித்துப் பெண் அலுவலர் ஒருவரிடம் நான் கூறியதைத் தொடர்ந்து, அவர் வெறும் கண்துடைப்பாகப் பேசிவிட்டுச்சென்று விட்டார். இதற்கிடையே அவர் மீண்டும் என்னை தொந்தரவு செய்யவே, நானும் என்னைப்போன்று இவரால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணும் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் அவர்மீது புகார் அளித்தோம். ஆனால்,அந்தப் புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த பிறகே, அச்சன்புத்தூர் காவல்நிலையத்தில் பெயருக்காக ஒரு எப்ஐஆர் போட்டனர். ஆனால், போலீசார் போட்ட எப்ஐஆர்-க்கும் நாங்கள் அளித்த புகாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதனிடையே, அளித்த புகாரை திரும்ப வாபஸ் பெறக்கோரி தொலைபேசி வழியாக முருகன் மீண்டும் அழைத்து கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்டு புகாரளித்த என்னைப் பணியிலிருந்து நீக்கிவிட்டனர். ஆனால், குற்றம் செய்தவர் இன்றுவரையில் பணியில் நீடிக்கிறார் எனில், போலீசார் போட்ட எப்ஐஆர் எந்தளவிற்கு உள்ளது என்று தெரிகிறது. இதுகுறித்து திமுக பேரூராட்சித் தலைவர் ஷேக் தாவூத், செயல் அலுவலர் தமிழ்மணியிடம் கூறியபோது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 'அவரை அனுசரித்துப் போ' என்று அறிவுரைக்கூறி அனுப்பினர்.
எனவே, நான் அளித்தப் பாலியல் புகாரின்பேரில், இனி எந்தப் பெண்களும் இவரால் பாதிக்கப்படாமலிருக்க அவர்மீது வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் நடவடிக்க எடுக்கவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வடகரை பேரூராட்சியில் ஒப்பந்த முறை பெண் சுகாதாரப்பணியாளர் சுகாதார மேற்பார்வையாளர் பாலியல் தொல்லை அளித்ததாகவும்; அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரும்பாக்கம் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது