மதுரை: தென்காசி அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆறுமுகம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’தங்கள் மகன் சீனு, அரியநாயகிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சீனுவை சில ஆசிரியர்கள் சாதிய ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் 14-ம் தேதி காலையில் சீனு பள்ளிக்குச் சென்றான். பகல் 11.30 மணியளவில் வீட்டில் தூக்கில் சீனுவின் சடலம் தொங்கியபடி இருந்தது.
சேந்தமரம் போலீஸார் எஸ்டி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சிபிசிஐடி விசாரணைகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்ததாகவும், அந்த வழக்கில் வழக்கை விசாரிக்க டிஎஸ்பியை விசாரணை அதிகாரியாக நியமிக்க தென் மண்டல ஐஜிக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டும் விசாரணை முறையாக நடைபெறவில்லை’ என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
’இதே பள்ளியில் கடந்தாண்டில் மட்டும் தனது மகன் உட்பட 3 மாணவர்கள் இறந்துள்ளனர். அனைவரும் வயிற்று வலியால் இறந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளனர். இவர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தவும், என் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ எனவும் மனுதாரர் ஆறுமுகம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர், கல்வி அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:மதுரை கோட்ட ரயில்வே வருமானம் 80% அதிகரிப்பு!