குப்பை கிடங்கை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை! - நோய் பரவும் அபாயம்
தென்காசி: நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே குப்பை கிடங்கு அமைந்துள்ளதால் நோய்த்தொற்று பரவுவதுடன், குப்பை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நீர் நிலைகள் மாசடைந்து சுகாதார சீர்கேட்டை உண்டாக்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லும் சாலையில் 15 வார்டுகளை உள்ளடக்கிய மேலகரம் முதல் நிலை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த வார்டுகளில் நன்னகரம், மின்னகரம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊர் ஓரமாக அப்பகுதி மக்கள் ஏற்பாட்டில் சுடுகாடு அமைத்து பராமரித்து வருகின்றனர்.
இதனருகில் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கை அமைத்து, உரம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் பகுதியில் குப்பை கிடங்கை அமைத்து பேரூராட்சி நிர்வாகம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் தீ மூட்டபடுவதால், குழந்தைகள், முதியவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இதனிடையே குற்றாலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் வழியே செல்கிறது.
இந்த வாய்க்கால் பாசனம் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பயன் படுகிறது. குப்பைகள் காற்றில் பரந்து வாய்க்காலில் கலப்பதால் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை உண்டாக்குகிறது. எனவே குப்பை கிடங்கை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 22 விழுக்காடு ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை!