கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் நாட்டில் ரயில்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னை வரை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த சில நாள்களுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு வந்தது.
இதனையடுத்து தென்மாவட்ட மக்களின் பிரதான ரயிலாக தினசரி இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் நேற்று (அக்.4) முதல் அதன் சேவையை தொடங்கியுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி மாலை 6.10 மணியளவில் புறப்பட்டது.
இந்த ரயில் மறுமார்க்கமாக சென்னை எழும்பூரிலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட உள்ளது. செங்கோட்டை ரயில் நிலையத்தில் வந்த பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உடல் வெப்ப பரிசோதனை முகக்கவசம் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தனர்.
6 மாத இடைவெளிக்கு பிறகு பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டதையடுத்து ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதிகை எக்ஸ்பிரஸில் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.