தென்காசி: வாய்க்கால் பாலம் அருகே உள்ள பிரதான சாலையில் ராஜா சிங் என்பவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (நவ. 3) இரவு வழக்கம்போல், கடையை பூட்டி சென்று உள்ளார். மீண்டும் இன்று (நவ. 4) காலை கடையை திறந்து பார்த்த போது, கடையின் பின்பக்க சுவரில் மர்ம நபர்கள் துளையிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
சந்தேகமடைந்த ராஜா சிங் கல்லாவைப் பார்த்த போது அதில் ரூ.3 ஆயிரம் திருடு போனது தெரியவந்துள்ளது. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தென்காசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் வீதியில் இரவு நேரத்தில் சுவர்களில் துளையிட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றது.
மேலும், தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே, இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமாகவே உள்ளன. இருசக்கர வாகனம் திருட்டு மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை என சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லாத நேரங்களில் பல்வேறு விதமான திருட்டு சம்பவங்கள் அரங்கேரி வருவதால் மக்கள் நிம்மதியின்றி காணப்படுகின்றனர்.
இந்த திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் தொடர் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் காவல் துறையினர் ஒரு சில குற்றவாளிகளை கண்டுபிடித்தாலும் தொடர் குற்ற சம்பவங்கள் தென்காசி மாவட்டத்தில் அரங்கேறிய வண்ணமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் மட்டும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் கூறப்படுகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் குறிப்பாக இதுபோன்று பெட்டிக்கடைகளை குறிவைத்து திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டு கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தென்காசி ஏராளமான கிராம பகுதிகளை ஒருங்கிணைந்து காணப்படுவதால் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.