தென்காசி: கடையநல்லூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவருபவர் ராஜகுரு. இவர், சாலையோரம் கையில் மதுபாட்டிலுடன் நின்றவாறு அங்கிருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இது குறித்து விசாரித்தபோது, ராஜகுரு திருமலாபுரம் பகுதியில் பாதுகாப்புப் பணிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சேர்ந்தமரம் மதுபான கடையில் மது அருந்திவிட்டு, பீர் பாட்டிலுடன் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அப்போது பேசிய அவர், “எனக்கு இந்த ஊர்தான். நான் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்” எனக் கூறியுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணகுமார் உத்தரவின்பேரில் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் ராஜகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
மேலும், ராஜகுருவை பணியிடை நீக்கம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோது “பொதுமக்களுக்குப் பிரச்சினை செய்வது காவல் துறையாக இருந்தாலும், அதைப் பார்த்து வேடிக்கை பார்க்க மாட்டோம்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் மேலாளர் புகார் அளித்துள்ளார். எனவே மதுபோதையில் பிரச்சினை செய்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைதுசெய்துள்ளோம். தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கணவன், மனைவி தற்கொலை விவகாரம்: மகனிடம் தீவிர விசாரணை