தென்காசி: பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் 'மக்களாட்சியை பாதுகாப்போம்' என்ற பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அமைதி பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் தடையை மீறி பேரணியை நடத்த முயன்றனர்.
இந்நிலையில் தென்காசி கொடிமரம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கலவரத் தடுப்பு வாகனங்களான வஜ்ரா, வருண் ஆகியவை பாதுகாப்பு பணிக்கு முன் எச்சரிக்கையாக கொண்டு வரப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், நெல்லை சரக காவல் துறை துணைத் தலைவர் ப்ரவேஸ் குமார் ஆகியோர் வேம்படி பள்ளிவாசல் திடல் அருகே முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கவனித்தனர். அமைதி பேரணி சொர்ணாபுரம் தெரு பகுதியில் இருந்து அணி வகுப்புடன் தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் பெண்கள், ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணி வேம்படி பள்ளிவாசல் முன்பு வந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பேரணியை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.
இந்த கைது படலம் மட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்து100 பேரை காவல் துறையினர் கைது செய்து, தென்காசி, கீழப்புலியூர் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: அப்போது பெண்களுக்கு... இப்போது ஆண்களுக்கு பாலியல் தொல்லை... என்ன கொடும சார் இது...