தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சியின் சில பகுதிகளில் நீண்ட காலமாகத் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது. பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தியும் இந்த தண்ணீர் பிரச்சனை தீராத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு சில இடங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சங்கரன்கோவில் மட்டுமல்லாமல் திருமலாபுரம் பகுதிகளிலும் தினசரி தண்ணீர் பிரச்சனைக்காக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவது வழக்கம்.
ஆனால் தற்போது வரை எந்தப் பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சனை தீராத நிலையே காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தை அணுகியும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமலேயே காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் அங்கும் இங்குத்தாக உள்ளதால் அந்தப் பகுதிகளுக்குத் தண்ணீர் வராததாகக் கூறப்படுகிறது. இதனால் தினசரி அப்பகுதி மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!
பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்காகத் தினசரி சங்கரன்கோவில் பகுதி முழுவதும் பேருந்துகள் வருவது வழக்கம். ஆனால் வடிகால் வாரிய திட்டத்தின் கீழ் அங்கங்கே ரோடுகளை தோண்டி போடப்பட்டு முறையான நிலையில் மூடப்படாததாலும் தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த பயனும் இல்லாததாகக் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் நகராட்சிக்கு உட்பட்ட 10-ஆவது வார்டு பகுதியில் திருநெல்வேலி செல்லும் சாலையில் ஒரு சில இடங்களில் மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை துரிதமாகச் செயல்படுத்தாமல் தாமதப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், பல்வேறு தெருக்களில் குடிநீர் வந்தே ஒரு மாதம் ஆகிறது எனவும், இப்போது வரை குடிநீர் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் புறப்பட்டு சங்கரன்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் காலி குடங்களுடன் வந்திருந்த பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முறையாக அனுமதி பெற்று போராட்டம் நடத்துமாறு கூறினர். இதனையடுத்து காலி குடங்களுடன் வந்திருந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.