கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்து பணிபுரியும் பணியாளர்கள் அத்தியாவசியப் பொருள்கள் சரிவர கிடைக்கப்பெறாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதனால் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப அரசுக்கு கோரிக்கைகள் வைத்துவந்தனர்.
அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இரண்டு கட்டங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,000 வட மாநில பணியாளர்களை திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் பிகார், ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது.
அதைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் கட்டட பணிகளைச் செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
அதையறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் அவர்களை ஆட்சியர் அலுவலகம் அருகேயே தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து அவர்களில் இருவரை மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட நெல்லை காவல் துறை