தென்காசி: கோயம்புத்தூர் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் காரில் இருந்த முபீன் என்ற நபர் உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சென்னை, கோவை, கடையநல்லூர் உள்ளிட்ட 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இது தொடர்பாக கோவையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது .
கோவை ஜி.எம் நகர் அபுதாஹீர், குனியமுத்தூர் பகுதியில் சோகைல், கரும்பு கடைப்பிலுள்ள மன்சூர் ஆகியோரின் வீடுகளிலும் மற்றும் உக்கடம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாநகராட்சி 82வது கவுன்சிலர் முபசீரா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெண் கவுன்சிலரான முபசீரா கோவை மாநகராட்சி வரி விதிப்புக் குழுவின் சேர்மனாக உள்ளார். பெரிய கடை வீதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஜி.எம்.நகர் திமுக பிரமுகர் தமிமூன் அன்சாரி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சென்னையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலாங்கரையில் பிஸ்மில்லா தெருவில் உள்ள புகாரி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இரசாலியாபுரம் முகமது இத்ரீஸ் என்பவரின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் 6 பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரனையின்போது முகமது இத்ரீஸ் செல்போனுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து தகவல் பரிமாறப்பட்டதன் அடிப்படையில் இவருடைய வீட்டில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களின் விநாயகர் சிலை குடோனுக்கு சீல்... கொதித்தெழுந்த அண்ணாமாலை.. மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன?