தென்காசி: தேசிய நல்லாசிரியர் விருது 2023க்கு தென்காசியை சேர்ந்த ஆசிரியை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆசிரியைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் “மாலதி” மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் “காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்” உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் மாலதி. இவர் தற்போது வி.கே.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் சேவையை பாராட்டி 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை இவருக்கு அளித்தது.
அதனைத்தொடர்ந்து, இவரின் சேவையை பாராட்டி மத்திய அரசு, “தேசிய நல்லாசிரியர் விருதையும்” அளித்துள்ளது. விருதுக்கு தேர்வானது குறித்து ஆசிரியர் மாலதி கூறியதாவது, மத்திய அரசு அளித்துள்ள இந்த விருது தனக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் சிறப்பான முறையில் பணியாற்ற உற்சாகத்தையும் அளித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், பள்ளியில் ரோபோட்டிக் வகுப்பு மற்றும் வில்லுப்பாட்டு கற்றுக் கொடுத்து வருகிறேன். தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 600 நாட்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்பு நடத்தி உள்ளேன். அறிவியல் பாடத்தை ஆர்வமாக மாணவர்கள் கற்கும் வகையில் வகுப்புகளை நடத்தி வருகிறேன். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் அறிவியல் வகுப்பில் பங்கேற்கின்றனர். இதுவரை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, ரோபோட்டிக் வகுப்புக்கான உபகரணங்களை எனது சொந்த செலவில் செய்தேன். அரசு பள்ளி மற்றும் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கி உள்ளேன். போட்டித் தேர்வுக்கான புத்தகம் எழுதியுள்ளேன். 1 லட்சம் ரூபார் மதிப்பிலான அந்த புத்தகத்தை தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளேன் என்று கூறினார்.
இந்நிலையில், தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்ற ஆசிரியருக்கு, அவருடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இணையதள மூலம் கற்றுக் கொண்டு, மாணவர்களுக்கு கற்பித்தால் மாணவர்களின் திறன் மேம்படும். அதன் மூலம் என்னைப் போன்று மற்றவர்களும் சாதிக்கலாம் என்று கூறினார். மேலும், செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் - அமைச்சர் மா.சு!