உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு தேநீர் கடைகள், முடித்திருத்தும் கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வில் 50 விழுக்காடு பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றுமுதல் தமிழ்நாடு முழுவதும் நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், திருச்சியிலிருந்து நாகர்கோவில்வரை இயக்கப்பட்ட ரயிலில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் இன்று காலை நெல்லையில் வந்திறங்கினர்.
அதேபோல் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு 11 பயணிகள் பயணம் செய்தனர். ஒரு மண்டலத்திற்குள் இ-பாஸ் தேவை இல்லை என்பதால் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இன்று மாலை 6 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து நெல்லை வழித்தடத்தில் திருச்சி வரை ரயில் புறப்படவுள்ளது. இந்த ரயிலில் மதுரை திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் அனுமதி பெற வேண்டும் என்பதால் நெல்லை ரயில் நிலையத்தில் இ-பாஸ் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.