தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் திமுக நெசவாளர் அணி அமைப்பாளர்களுக்கான தென் மண்டல ஆலோசனைக் கூட்டம், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு உரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால்தாலேயே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை மாறி இப்போது, சமஸ்கிருதம் படிக்காமல் மருத்துவர் ஆக முடிகிறது என்றால் அது திமுகவின் சாதனை. தமிழ்நாடு பெரியாரின் பூமி. அண்ணா வளர்த்த மண். கருணாநிதி காத்த மண். இப்போது மு.க.ஸ்டாலின் வழிநடத்தும் மண். இந்த மண்ணில் காவிக்கோ, காவி பூசிக்கொண்டு வரும் யாருக்கும், எந்த முருகனுக்கும் இடம் இல்லை” என்று தெரிவித்தார்.