தென்காசி மாவட்ட மேற்குதொடர்ச்சிமலை வனப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களாக சீசன் களைகட்டி வந்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. மேற்குதொடர்ச்சிமலை வனப்பகுதியில் மழை முழுமையாக நின்றுள்ளது. இதன் காரணமாக அருவிக்கரை பாறையையொட்டி சிறிதளவே பம்பு செட்டில் விழுவது போன்று தண்ணீர் வருகிறது. இதனிடையே தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால், குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
ஆனால் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு பல மணி நேரம் காத்திருந்து, சிறிதளவு விழும் அருவி நீரில் குளித்துச் செல்கின்றனர். அதேநேரம் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் மட்டுமே அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி