தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு தென்காசியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக நிர்வாகிகள் பங்கேற்ற செயற்குழு கூட்டம் வருவாய்த் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "தென்காசி திமுக நிர்வாகிகள் இடையே அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்ற சூழ்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் என்னிடம், தென்காசி மாவட்டத்தில் கட்சியின் ரிப்போர்ட் சரியில்லை எனக் கூறினார். தற்போது அவைகள் சீராகி வருகின்ற சூழலில், புதிய மாவட்டச் செயலாளர்கள் உடன் இணைந்து கட்சிக்கு உண்மையாகவும், நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாத காரணத்தினால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது கட்சிக்கு விசுவாசம் உள்ளவர்களுக்கு பதவிகள் தேடி வரும். கூட்டுறவுத் தேர்தலிலும் கட்சிக்காக உழைக்கக் கூடியவர்களுக்கு பதவி தேடி வரும். திமுகவில் வரக்கூடிய காலங்களில் உதயநிதிக்குத்தான் எதிர்காலம் உள்ளது. எனவே, அதனை புரிந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, வருகிற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடத்த திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 1980ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று மதுரையில் உள்ள ஜான்சி ராணி பூங்காவில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டது.
பின்னர், 1982ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி இரண்டாம் ஆண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சுமார் 30 ஆண்டுகள் திமுகவின் இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றிய நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவரானார்.
இதனால், இளைஞரணி செயலாளர் பதவியை வெள்ளக்கோயில் சாமிநாதன் வகித்து வந்தார். இந்த நிலையில் தான், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலத்தில் இளைஞரணி மாநாடு நடைபெறும் என திமுக அறிவிப்பு - எப்போது தெரியுமா?