தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில், திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி பரபரப்புரைப் பயணம் மேற்கொண்டார்.
பதவி வெறி
இதைத் தொடர்ந்து கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசுகையில், "சிறுபான்மையினருக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை இயற்றிவருகிறது.
ஆனால், இவைகளை எதிர்த்து குரல் கொடுக்க தைரியமில்லாத அரசாக அதிமுக செயல்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே கூறுபோட்டு விற்றாலும் எஞ்சியுள்ள மூன்று மாத ஆட்சியையும் விட்டுவிடக் கூடாது என்ற பதவி வெறியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
அடிக்கல் நாயகன்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை நாயகன் என்று கூறிவருகிறார். அது எங்களுக்குப் பெருமையே. ஏனென்றால், அவர் அறிக்கை வெளியிடுவதால்தான் ஒன்று இரண்டு நல்ல திட்டங்களும் தமிழ்நாட்டிற்குச் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில், எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமல் வெறும் அடிக்கல் மட்டும் நாட்டி, அடிக்கல் நாயகனாக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார். அந்த வகையில், முதலமைச்சர் பழனிசாமி தமிழ்நாட்டிற்கு வந்த கோளாறாக உள்ளார்" எனச் சாடினார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர், நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுகவினருக்கு பதவி வெறி - கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு