தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கள்ளம்புளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் வசிக்கும் பகுதியில் அடி பம்புகள் எத்தனை உள்ளன, அவை பழுது பார்க்க தேவையான உபகரணங்கள் எங்கு வாங்கப்படுகின்றன, இதுவரை பழுது பார்த்தற்கான செலவு எவ்வளவு, குப்பைத் தொட்டிகள் எவ்வளவு அமைக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த 15க்கும் மேற்பட்ட கேள்விகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ளார்.
இவ்விவகாரம் கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்புடையது என்பதால் அவருக்கு அனுப்பப்பட்டது. அதற்கான பதிலையும் அவர் அளித்துள்ளார். அதில், சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு இணையதளத்தைச் சுட்டிகாட்டி, அதில் சென்று விவரங்களைப் பார்க்குமாறும், இணையதளத்தைக் கையாளா அறிவு இல்லையெனில் அறிவுள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் இந்தப் பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சந்திரன் கூறுகையில், ”எங்கள் பகுதியிலுள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து வந்த பதில் மிகவும் அதிர்ச்சியளித்தது.
எனக்கு அறிவு இல்லை என்று கூறும் அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்பவர்களுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பதிலளித்த அவர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கான முறையான பதில் வரும் வரை மீண்டும் கேள்விகள் கேட்பேன்” என்றார்.
இதையும் படிங்க: 12 இடங்களை அபாயகரமான பகுதிகளாக அறிவிக்க கோரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு