நாடெங்கிலும் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் அதனை தொடர்ந்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகை காலத்தில் ஒருவர்கொருவர் கேக் மற்றும் இனிப்புகளை வழங்கி, தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்துவருகின்றனர். இங்கு அதிகப்படியான பேக்கிரி கடைகளையும் காண முடியும்.
இந்நிலையில் இந்த வருடம் கரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பொதுமக்கள் முடங்கி கிடந்ததோடு, அவர்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்பண்டிகை நாள்கள் அவர்களை மீண்டு எழ வைத்துள்ளது. இந்நிலையில், கேக் விற்பனை குறித்து பேக்கரி உரிமையாளர்கள் கூறுகையில், ”தங்கள் பேக்கரியில் வெண்ணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெரி, பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், பனானா மேங்கோ, ஆரஞ்சு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கேக் வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இன்னும் ஓரிரு நாள்களில் கிறிஸ்மஸ் மற்றும் வருடப்பிறப்பு வருவதால் கேக் தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம். ஒரு கிலோ கேக் 150 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலத்தில் குறைந்தது 10 நாள்களுக்கு முன்னரே வாடிக்கையாளர்கள் கேக் ஆர்டர் கொடுப்பது உண்டு. ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து, கேக் ஆர்டர் வரவில்லை” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் கண்காட்சி!