தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பேட்டை பஜார் சாலையில்
நகைக்கடைகள் அமைந்துள்ளன. இதில் உள்ள 2 நகைக் கடைகளில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி, மதுரை, சென்னை பகுதிகளில் இருந்து 5 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலை முதல் சோதனையைத் தொடங்கினர். சோதனையைத் தொடர்ந்து கடைக்குள் வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
சோதனை நடந்த கடைகளில் ஒரு கடையில் 916 நகைகளுக்குப் பதிலாக தரம் குறைந்த தங்கம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சை கருத்து பரவியது. இதனால், கடையநல்லூர் பகுதியில் உள்ள நகைக் கடைகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சமூகவலைதளங்களில் பரவியது பொய்யான தகவல் எனக் கடை நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.
மேலும், கடையநல்லூர் நகை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதிலும், தரம் குறைந்த நகைகள் கடையநல்லூர் கடைளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறியது தவறானது என்றும், அனைத்து கடைகளிலும் 916 நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வியாபாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
போலி தங்கம் குற்றச்சாட்டு இந்த சோதனைக்கு அடித்தளமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோதனை நடைபெற்ற கடையை போட்டோ, வீடியோ எடுக்கச் சென்ற செய்தியாளர்களை செய்தி சேகரிக்கவிடாமல் கடையின் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தடுத்ததுடன், தகாத வார்த்தையால் திட்டி, அங்கிருந்து செல்லுமாறு கூறினர். வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.