தென்காசி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அரசியலில் ஈடுபடவுள்ளதாக கடந்த சில மாதமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திடீரென துரை வைகோ மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் நிர்வாகிகள் அவரை தேர்ந்தெடுத்துள்ளதாக வைகோ செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று (அக்.21) துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அரசியல் பயணம்
அப்போது பேசிய அவர், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக செயலாளராக என்னை ரகசிய வாக்கெடுப்பின் மூலம் 106 பேர் தேர்தலில் வாக்களித்ததில் 104 வாக்குகள் எனக்கு கிடைத்தன.
நான் மதிமுகவின் தலைமை கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த 104 நபர்கள் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக பொறுப்பை திறம்பட செயல்படுத்த வேண்டும் என ஒரு மனச்சுமை உள்ளது.
இந்த அரசியலில் சவால் நிறைந்த பயணம் அதிகமாக உள்ளது. பெரிய மலையை தூக்கி வைத்து சுமப்பது போல ஒரு சுமையாக உள்ளது. தலைவர் வைகோவை போல் சொல்லாற்றல் செயலாற்றல் எனக்கு கிடையாது. என்னால் முடிந்த மட்டும் நான் உழைக்க தயாராக இருக்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள் நினைத்தால் கட்சியை ஒரு முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல என்னால் முடிந்தவரை உழைப்பேன்.
அரசியலில் உடன்பாடு இல்லை
6 விழுக்காடு இருந்த மதிமுக தற்போது கடந்த சில ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. இனிவரும் காலங்களில் கட்சியை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இணைந்து கடமையாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என்னை தொலைபேசியில் பல முறை தொடர்பு கொண்டு சாத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லையா எனக் கேட்டார். அதற்கு நான் எனக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்தேன்” என்றார்.
இதையும் படிங்க: மகன் துரை வையாபுரிக்கு பதவி? - வைகோ சொன்ன பதில்