தென்காசி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி இரண்டு மாதங்கள் முழுமையாக நிறைவடையவுள்ள நிலையில், ஒருசில நாள்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைந்தே காணப்பட்டது.
கடந்த வாரங்களில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பின் இன்று (ஜூலை 29) அதிகாலை முதல் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக, மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. மாவட்டம் முழுவதும் சாரல் மழையும், இதமான காற்றுடன், குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய சுற்றுலாத் தலங்களில் 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.