தென்காசி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (நவம்பர் 15) மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது.
தொடர் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி, கடனாநதி உள்ளிட்ட 5 அணைகளில் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுபோன்று குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் குற்றாலத்தில் குளிக்க தடை உத்தரவு நீட்டிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் வாசிகள் மழையில் நனைந்தபடி அருவிகளை ரசித்ததோடு புகைப்படம் எடுத்தபடி சென்றனர். காவல் துறை சார்பில் 24 நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக சாலைகளில் இருபுறமும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன் கழிவுநீரும் கலப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.