தென்காசி: இலஞ்சியில், தமிழ்நாடு அரசின் இலவச மிதி வண்டி வழங்கும் விழாவில் 2 நிமிடங்களில் முதலமைச்சரின் படத்தை தலைகீழாக வரைந்து அசத்திய மாணவிகளுக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பரிசுகள் வழங்கிப்பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு, அரசுப்பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கி வருகின்றன. அதன்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தென்காசி அருகே உள்ள இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கு ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி செயலாளர் சண்முக வேலாயுதம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் மற்றும் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பூர்ணிமா, நிலோபர், சத்யா ஆகிய மூன்று மாணவிகள் முதலமைச்சரின் உருவப்படத்தை தலைகீழாக இரண்டு நிமிடங்களில் வரைந்து அசத்தினர். விழா மேடையில் முதலமைச்சர் உருவப்படத்தை வரைந்த மாணவிகளுக்கு தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் 113 மாணவர்களுக்கும், 67 மாணவிகளுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: பள்ளிக்கு வராத பட்டியலின மாணவர்கள் - முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆய்வு