தென்காசி: ஆலங்குளம் அருகே அமைந்துள்ளது காளத்தி மடம் எனும் கிராமம். இங்கே பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே வசித்து வருகின்றனர். பொதுவாகத் தென் மாவட்டங்களில் பெண்கள் மத்தியில் பீடி சுற்றும் முக்கிய சுய தொழிலாக இருந்து வருகிறது. அதன்படி இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் அதிக அளவு ஈடுபட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பெண்கள் சுயமாக தங்கள் குடும்பத் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இப்படி காளத்தி மடம் கிராமத்தில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளிகளின் குழந்தைகள் கபடிப் போட்டியில் அசத்தி வருகின்றனர். இவர்களுக்கு இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கபடி வீரர்களான, அர்ஜுனன் மற்றும் சௌந்தர் ஆகிய இருவரும் கபடி விளையாட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
கபடி மீது அதீத காதல் கொண்டுள்ள அர்ஜுனன் மற்றும் சௌந்தர், தாங்கள் விளையாடும் நேரங்களில் ஆலோசனை வழங்குவதற்கும், நிதி உதவி செய்வதற்கும் போதிய ஆதரவு இல்லாததால், கபடியில் சாதிக்க முடியவில்லை. எனவே தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களை, இளம் வயதிலேயே கபடியில் சாதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இலவசமாகக் கபடி விளையாட்டு கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக விவசாயம் செய்து வரும் அர்ஜுனன் தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளை சிறுவர்களுக்குக் கபடி பயிற்சி அளித்து வருகிறார். சௌந்தர் பயிற்சிக்கான மைதானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். தினமும் அதிகாலை மாணவர்கள் ஆர்வமுடன் வரும் மாணவர்களுக்கு அர்ஜுன் முதல் கட்டமாக உடற்பயிற்சி அளிக்கிறார். தொடர்ந்து கபடியில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து போட்டியில் சாதிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
![கோப்பைகளுடன் இளம் புயல் கபடிக்குழு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-01a-beedilabours-playkabadi-specialstory-scrt-7205101_07012023174904_0701f_1673093944_176.jpg)
பயிற்சியின் அடிப்படையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் 'இளம் புயல்' என்ற பெயரில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பல்வேறு வெளி மாவட்டங்களில் விளையாடி 25க்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளனர். மேலும் அர்ஜுனின் முயற்சியால் இளம் புயல் கபடி அணியினர், விரைவில் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். வெறும் விளையாட்டை கற்றுக் கொடுப்பதோடு விட்டு விடாமல், கபடி மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும் என்பதே தனது லட்சியம் என தெரிவிக்கிறார் அர்ஜூனண்.
இது குறித்து அர்ஜுனன் நம்மிடம் கூறுகையில், "நான் சிறுவயதிலிருந்து கபடி விளையாடுகிறேன். அப்போது என்னால் சாதிக்க முடியவில்லை. எனவே எனது மகள்களுக்குக் கபடி கற்றுக்கொடுத்தேன். அதை பார்த்து இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அவர்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டனர் ஆனால் நான் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஆரம்பத்தில் எனக்குப் பெரிய எதிர்ப்பு இருந்தது.
நான் படிக்காதவன் எனவே என்னிடம் குழந்தைகளை அனுப்ப வேண்டாம், என அவதூறு பேசினார்கள். ஆனால் அதையும் தாண்டி பயிற்சி அளித்து வந்தோம். தற்போது ஏராளமான போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெறுவதால், அனைவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கின்றனர். பெற்றோர்களும் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். இங்கு பயிற்சிக்கு வரும் அனைவரும் பீடி தொழிலாளர்களின் குழந்தைகள். அனைவரும் அரசுப் பள்ளியில் தான் படிக்கின்றனர்.
இந்த வெற்றி மூலம் அரசு பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்த கபடி விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு பெற்று தர வேண்டும் என்பதே எனது லட்சியம்” என கூறினார். கபடி போட்டியில் இந்திய அளவில் சாதனை புரிய வேண்டும் என்ற ஆசை உள்ளது எங்களுக்கு பள்ளி தேர்வு நேரத்தில் பயிற்சியாளர் இலவசமாக டியூஷன் ஏற்பாடு செய்துள்ளார் எனவே பயிற்சியால் எங்கள் படிப்பு பாதிக்கப்படவில்லை என்று மாணவர்கள் பெருமையோடு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நம்மாழ்வார் நினைவு தினம்: கும்பகோணத்தில் நடந்த அறுசுவை உணவுத் திருவிழா!