தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் காவல் துறையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது, சிவகிரி காந்தாரியம்மன் கோயில் அருகே வெகுநேரமாக சந்தேகப்படும்படி கார் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அந்த சந்தேகத்தின் அடிப்படையில், காரின் உள்பகுதியில் சோதனை செய்தபொழுது, 3 மான் கொம்புகள் பிடிபட்டுள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த தகவலின் பேரில் வந்த வனச்சரக அலுவலர் மெளனிகா, வனவர் அசோக்குமார் ஆகியோரிடம் அந்த மான் கொம்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு வனப் பணியாளர்கள் நடத்திய தீவிர விசாரணையில், சிவகிரி தாலுகா பகுதிக்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் பெத்திராஜ் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (24) மற்றும் வாசுதேவநல்லூர் களஞ்சியம் தெருவைச் சேர்ந்த தியாகு (24) ஆகிய இருவரும் நண்பர்கள் எனவும், கிராமத்திற்கு மேற்கே அரசு காப்பு காட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து, புள்ளிமானை வேட்டையாடியது தெரிய வந்துள்ளது.
தற்போது பிடிபட்ட மான் கொம்புகள், அவர்கள் வேட்டையாடி மான் கொம்புகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவர் மீதும் சிவகிரி வனச்சரக அலுவலகத்தில், வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்காசியில் அனுமதி மறுக்கப்பட்ட காப்புக் காட்டில் 2 நபர்கள் அத்துமீறி நுழைந்து, மானை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.