தென்காசி மாவட்டம், புளியரையில் உள்ள புகழ்பெற்ற தட்சணாமூர்த்தி கோயில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு புகுந்த கரடி ஒன்று, அப்பகுதியில் தொடர்ந்து உலாவி வருகிறது.
வனக்கால்நடை பிரிவு மருத்துவர்கள், அதிவிரைவு மீட்புக் குழுவினர், வனத்துறையினர் ஆகியோர், இந்தக் கரடியை கூண்டு வைத்தும், மயக்க ஊசி போட்டும் பிடிக்க சுமார் ஒரு வார காலமாக முயன்று வருகின்றனர். ஆனால் கரடி வனத்துறையினருக்கு ’தண்ணி காட்டும்’ வகையில், அதிகாலையில் ஒரு பகுதியில் முகாமிட்டும், மதிய வேளையில் மற்றொரு பகுதியில் முகாமிட்டும் சுற்றித் திரிந்து வருகிறது.
எனவே, வனத்துறையினர் தொடர்ந்து கூண்டு வைக்கும் இடத்தையும் மாற்றி வருகின்றனர். தற்போது, மூன்றாவது முறையாக கூண்டின் இடத்தை மாற்றியுள்ளனர். இருப்பினும் கரடியை பிடித்த பாடில்லை. விளைநிலங்களில் சுற்றித்திரியும் இக்கரடியால் பொதுமக்கள் அப்பகுதியில் அச்சத்துடன் வெளியில் சென்று வருகிறார்கள்.
சமீபத்தில் குற்றாலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கி வனத்துறையைச் சேர்ந்த வேட்டைத் தடுப்பு காவலர் உயிரிழந்ததை தொடர்ந்து, வேறு எந்த உயிரிழப்பும் வரக்கூடாது என்பதற்காகவே இந்தக் கரடியை எப்படியாவது பிடிக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.