தென்காசி: தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையையொட்டி, கடந்த சில நாட்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான மக்கள் சளி, காய்ச்சல் போன்றவைகளால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், சிறிய கிளினிக்குகள் ஆகியவற்றில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது 100க்கும் மேற்பட்ட மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தென்காசியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு ப்ளூ காய்ச்சலின் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த ப்ளூ காய்ச்சல் கடந்த சில நாட்களாகத்தான் தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் பரவி வருவதாக சுகாதாரத் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த காய்ச்சல் சளி, இருமல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும், இது மழைக் காலத்தில் ஏற்படும் சாதாரண காய்ச்சல்தான் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜயகாந்த் உடல்நலம் எப்படி இருக்கிறது? - வீடியோ வெளியிட்ட பிரேமலதா!
இதனால் பாதிக்கப்படும் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், இதனைக் கட்டுப்படுத்த சூடான குடிநீரைப் பயன்படுத்த வேண்டும் என்றும், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஏற்கனவே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "99% கஞ்சா விற்பனை ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் செய்கின்றனர்" - எம்.பி வைத்திலிங்கம்!