திருப்பத்தூர் : வைரவன்பட்டி கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் கண்மாய் நிரம்பியது. தொடர்ந்து விவசாய தேவைக்கு மழை நீரை பயன்படுத்தியதால் கண்மாயில் நீர் வற்றியது.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் ஒற்றுமையாக மீன்பிடிக்க முடிவு செய்து அறிவிப்பு செய்தனர். முதலில் ரூ.100 பணம் செலுத்தி ஊத்தா கூடை மூலம் மீன் பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. முதலில் கட்டணம் செலுத்தியவர்கள் மின்னல் வேகத்தில் வந்து கண்மாயில் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து இதில் கிராம மக்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் போட்டி போட்டு அரிவலை, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு சாதி மத வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக கண்மாயில் கிடைத்த விரா, கட்லா, ஜிலேப்பி, கெழுத்தி உள்ளிட்ட மீன்களை கூடை கூடையாக பிடித்து சென்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் வைத்து சட்டவிரோதமாக சாராய விற்பனை - பொதுமக்கள் எதிர்ப்பு