திருவேங்கடம் வட்டம் மருதங்கிணறு கிராமத்தில் ஏராளமான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் 2016 - 17 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை நிலுவைத் தொகை வழங்குவதற்கு கூட்டுறவு சங்க தலைவர் சரவணன் கமிஷன் தொகை கேட்டு தர மறுத்துள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 2016 - 17 ஆம் ஆண்டுக்கான பயிர் செய்த மகசூலுக்கு ஏற்ப பயிர் காப்பீடு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 8,000 விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதன் பேரில் அரசு தர உத்தரவிட்டது.
ஆனால் அந்த தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு மருதங்கிணறு கூட்டுறவு சங்க தலைவர் சரவணன் மறுத்து வருகிறார். மேலும் அதனை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு அவருக்கு ரூபாய் 100க்கு 20 விழுக்காடு என்ற அடிப்படையில் கமிஷன் தொகை தந்தால் மட்டுமே வழங்கப்படும், இல்லை என்றால் பணத்தை திரும்ப அனுப்பி விடுவோம் என விவசாயிகளை மிரட்டி வருகிறார்.
இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் பறித்துச் சென்றவரை துரத்திப் பிடித்து, குத்திக் கொன்ற இளைஞர்கள்!