தென்காசி: விளை நிலங்களை சூறையாடும் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சிற்றறிவு, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இந்த நீர் ஆதாரத்தை நம்பி அப்பகுதியை சுற்றியுள்ள 1500க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் உள்ளன.
இந்த விளை நிலங்களில் விவசாயிகள் நெல், இஞ்சி, சேனைக் கிழங்கு, கடலை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில் காசிமேஜர்புரம் பகுதியில் பயிரிடப்பட்ட நெல் வகைகள் கதிர் விடும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் வனப்பகுதியிலிருந்து கரடிகள், பன்றிகள், காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை வீணடித்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கரடி சுற்றித் திரிவதாகவும், விளைநிலங்களில் நீர் பாய்ச்ச விவசாயிகள் செல்லும்போது அவர்களை துரத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் உயிர் பயம் காரணமாக விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அக்கரடி தன் குட்டியுடன் சுற்றி வருகிறது எனவும், கரடியை கூண்டு வைத்து பிடித்து அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என விவசாயிகள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.