தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (செப்.22) மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயம் சார்ந்த குறைகள் மட்டுமே தீர்க்கப்படும் எனக் கூறப்பட்டதால் கொந்தளித்த விவசாயிகள், அனைத்து குறைகளும் கேட்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு உடன்பாடு இல்லாததைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த விவசாயிகள் “இது விவசாயிகள் குறைதீர் கூட்டம். எனவே, விவசாயிகள் கூறும் குறைகளை தீர்க்க வேண்டும். இல்லையெனில், இது விவசாயம் குறைவீர் கூட்டம் என பெயர் மாற்றம் செய்யுங்கள்” என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கட்டுப்பாட்டில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றதாகவும், காவல் துறையினர் அச்சுறுத்தும் வகையில் விவசாயிகள் கோரிக்கைகளை கூற விடாமல் இருந்ததாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தொடர்ந்து பேசிய விவசாயி ஒருவர், தனது தந்தை உடப்பன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி கரும்பு விவசாயம் செய்து வந்ததாகவும், கரும்பு அறுவடை செய்த பயிர்களை சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்து, அதன் மூலம் வரக்கூடிய காசோலைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் அதிகாரிகள் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், 2014-இல் வாங்கப்பட்ட கடன் தற்போது 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தரணி சர்க்கரை ஆலை வாயிலாக வரவு வைக்கப்பட்டு வந்த காசோலைக்கான தொகை திரும்ப வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்து வருவதாகவும், இவ்வாறு பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதையும் படிங்க: Dengue fever: உசார் ஐயா உசாரு..! கொசு உற்பத்திக்கு வழிவகுத்தால் 500 ரூபாய் அபராதம்..!