பார்வையற்ற தாய்க்கு கழிப்பறை கட்ட 10 வயது சிறுவன் போராடும் செய்தி நமது ஈடிவி பாரத் தளத்தில் சிறப்பு கட்டுரையாக வெளியிடப்பட்டது. அதில் "பார்வையற்ற அம்மாவுக்கு கழிப்பறை; போராடும் 10 வயது சிறுவன்" என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இச்சூழலில் ஈடிவி பாரத் செய்தி பார்த்த தென்காசி மாவட்ட பேரூராட்சி அலுவலர்கள், சிறுவனின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளனர். குறிப்பாக திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகள் துணை இயக்குநர் குற்றாலிங்கம், ஈடிவி பாரத் செய்தி மூலம் மகேஸ்வரி குடும்பத்தின் நிலைமையை உணர்ந்து அவருக்கு உதவ முன் வந்துள்ளார்.
அதன்படி சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் மகேஸ்வரிக்கு கழிப்பறை கட்டி கொடுப்பது தொடர்பாக கீழமை அலுவலர்களிடம் கேட்டறிந்தபோது, இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு முடிந்துவிட்டது. அதனால் தாமதம் ஏற்படும் என்பதால், துணை இயக்குநர் குற்றாலம் அரசின் உதவியை எதிர்பார்க்காமல், தனது சொந்த நிதியிலிருந்து மகேஸ்வரியின் வீட்டிற்கு கழிப்பறை கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் வாசுதேவநல்லூர் பகுதி பேரூராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு, மகேஸ்வரி வீட்டிற்கு சென்று நேரில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் பேரூராட்சி அலுவலர்கள் இன்று மகேஸ்வரி வீட்டிற்குச் சென்றனர். தொடர்ந்து மீதமுள்ள பணிகளுக்கு ஆகும் முழு செலவையும் இணை இயக்குநர் குற்றாலிங்கம் ஏற்பதாகவும், எனவே கவலை வேண்டாம் எனவும் மகேஸ்வரியிடடம் ஆறுதல் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் பேரூராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, கண்பார்வையற்ற மகேஸ்வரி தனது வீட்டில் கழிவறை கட்ட சிரமப்படுவது குறித்து உங்கள் செய்தி தளத்தின் மூலம் அறிந்தோம். நெல்லை மண்டல பேரூராட்சி துணை இயக்குநர் குற்றாலிங்கம் உத்தரவின்பேரில் மகேஸ்வரியின் வீட்டில் கழிப்பறை கட்ட ஆகும் மொத்த செலவையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளோம். எனவே, விரைவில் அவருக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.