தென்காசி: புளியங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்புகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வின் மேடையில் ஸ்டார்ட் அப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், ‘நம்முடைய பகுதியில் ஏதேனும் வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இங்குள்ள பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. நமது நாட்டிலேயே கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது.
மேலும், 65% மக்கள் கிராமத்தில் உள்ளனர். மக்களுக்கு உண்டான தேவைகள் அனைத்தும் நகரத்தில் இருக்கிறது. வளர்ச்சியும், வாய்ப்புகளும், பொருளாதாரங்களும் இங்கே இல்லை. அதை மாற்ற வேண்டும் என்பதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது ZOHO நிறுவனம்.
தென்காசியில் மத்தளம் பாறை ஊரில் உள்ள 1000 பொறியியல் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தை உலகத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். எனது அடிப்படை ஆரம்ப காலத்தை நோக்கி செல்கிறேன். ஏழ்மையான சிறுவனாக வளர்ந்தேன். பட்ட கஷ்டங்கள் அதிகம்.
ஆனால் கஷ்டத்திலிருந்து வெளியே வருவதற்கு எனக்குக் கிடைத்த ஒரே ஒரு தூண் படிப்பு. எனக்குப் படிப்பு மிகவும் உதவியது. தொழில்நுட்பக் கல்வியால் மட்டுமே எனக்கு பொருளாதாரத்தை வளர்க்க முடிந்தது. இங்குள்ள ரைஸ் மில்லில் நெல் அரைப்பதற்கு ரூ.60லிருந்து 80 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இங்கு அந்த கருவியை 10 கோடி ரூபாய் கொடுத்து வெளிநாடுகளிலிருந்து வாங்குகின்றோம். அதை நாம் உருவாக்குவதில்லை. எந்த கல்லூரிகளில் கூகுள் challange நடக்கிறது என்று தேடிச்சென்று உங்களுக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்த ரைசுதீன் சையத் ஹனி, வெங்கட்ராமன் ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவுரைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் அருகில் உள்ள சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் முடிவில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:அதிக செயல்திறனுடன் ஐமேக்ஸ் லேப்டாப்பை அறிமுகம் செய்த ஆப்பிள் !