கரோனா பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனைப் பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்பதில் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் விடா முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி, தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு சந்தைப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷினி, வெளியே வரும் ஒவ்வொரு நபர்களை அழைத்து அநாவசியமாக வெளியே வரவேண்டாம் எனவும், நோய்த்தொற்று பரவினால் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதுபோல சந்தைக்கு வரும் குழந்தைகள், பெண்கள் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தால் அவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து, குழந்தைகளுக்கு தானே அணிவித்து அனுப்பிவைத்தார். குறிப்பாக அவர் குழந்தைகளிடம், எப்படிக் கை கழுவுதல் வேண்டுமென செய்துகாட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதுவரை, அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, இதுவரை 358 வழக்குகள் பதியப்பட்டு, அதில் 424 வாகனங்களும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன எனக் காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷினி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்மா உணவகத்தில் அமைச்சர் கே. சி.வீரமணி ஆய்வு