தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் வெளி மாவட்ட, மாநில பயணிகள் இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தை கரோனா தொற்றால் 300க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 198 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். வீடுகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசு முகாம்களில் 400க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) வடகரை, தென்காசி, பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கும் வீரகேரளம்புதூரில் பணியாற்றி வரும் தாசில்தார், தென்காசியில் பணியாற்றி பணிமாறுதலுக்கு சென்ற தாசில்தார், வருவாய் ஆய்வாளர் என 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 345ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.