தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசுவத் திருவிழா ஐப்பசி திருக்கல்யாணம், திருவாதிரை திருவிழா வெகு விமர்சையாக 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டுகளில் கரோனா தொற்று காரணமாக திருவிழாவானது தடைபட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 5ஆம் தேதி குற்றாலநாதர் சுவாமி சன்னதியில் எதிரே உள்ள கொடி மரத்தில் 16 வகை மூலிகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை, மந்திரங்களுடன் பஞ்சவாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஐந்தாம் திருவிழாவையொட்டி விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் ஆகிய சுவாமிகளின் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட நான்கு தேர்களில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவினை இந்து சமய அறநிலைத் துறையினரும் கட்டளைதாரர்களும் செய்திருந்தனர்.