தென்காசி: சங்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றான சங்கரநாராயண சுவாமி ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத திருக்கோயிலில் சித்திரை திருவிழா 48 நாட்கள் நடைபெற்றது. மேலும் கோயில் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார கிராமத்திலிருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் சங்கரநாராயணன் திருக்கோயிலில் வந்து வழிபட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் இத்திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் சங்கரநாராயண திருக்கோயிலில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவில் சங்கரநாராயணன் திருக்கோயிலில் தினந்தோறும் காலை மாலை இரு வேலைகளிலும் சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான சந்தனம், பன்னீர், நெய், பால், தேன் என பல்வேறு பொருட்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதணைகள் காண்பிக்கப்பட்டது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 3 தேதி சுவாமி அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர்.
மேலும் தேரோட்டத்தில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் விதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தீயணைப்புத் துறையினர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சங்கரன்கோவிலில் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படையை சூழ வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்ட திருவிழா ஆனது காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்கி சாயங்காலம் 5 மணி அளவில் முடிவடைந்தது. இதற்குப் பின்னர் எந்தவிதமான அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் தேரோட்ட திருவிழா முடிவடைந்து சாயங்காலம் தேரோட்ட நிகழ்சியின் போது தேருக்கு தடி போடும் பக்தர்களுக்கு மேளதாளங்கள் முழங்க மரியாதை செய்து ஊர்வலமாக அழைத்து வருவதும், அதைப்போல ஊர்வலமாக அழைத்துச் சென்று அவர்களின் இருப்பிடத்தில் விடுவதும் சம்பிரதாயங்களில் ஒன்று.
பாரம்பரியமாக நடைபெறுவதைப் போல இந்த வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தின் முடிவில் தேரை நிலையில் நிறுத்திவிட்ட தேருக்கு தடி போடும் பக்தர்கள் சாமி சரி தரிசனம் செய்துவிட்டு தங்களது இருப்பிடத்திற்கு ஊர்வலமாக செல்ல ஒருங்கிணைந்தனர். அப்போது வழக்கமாக செல்லும் வழியை காவல்துறையினர் பேரி கார்டு அமைத்து மறித்ததால் தேருக்கு தடி போடும் பக்தர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பதட்டம் அதிகரித்தது. பின்பு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வழக்கமாக செல்லும் பாதையில் அனுமதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு மேளதாளங்கள் முழங்க வழக்கமாகச் சொல்லும் சலையில் ஊர்வலமாக சென்றனர். திடீரென சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருவிழாவில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: Pradosham: அண்ணாமலையார் கோயில் நந்திக்கு சித்திரை மாத பிரதோஷ வழிபாடு!